‘ஆவா’ குழுவால் வடக்கில் அச்சுறுத்தல் இல்லையாம்; பிரதிப்பொலிஸ் மா அதிபர்

ஆவா குழு என்பது நினைப்பதைப் போன்று பெரியதொரு குழு அல்ல. சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்தக் குழுவால் வடமாகாணத்தின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லையென வடமாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஆவா குழுவில் இருந்தவர்கள் பிரிந்து சென்று தனித்தனிக் குழுக்களை அமைத்திருப்பதுடன், அந்தக் குழுக்களுக்கிடையில் மோதல்களே தற்பொழுது அதிகம் இடம்பெற்று வருகின்றன. பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு வடமாகாணத்தில் பொலிஸார் அமைதியை நிலைநாட்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பிலுள்ள பொதுநிர்வாக மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தில் உள்ள 53 பொலிஸ் பிரிவுகளில் யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய நான்கு பொலிஸ் பிரிவுகளில் மாத்திரமே இந்த ஆவா குழுவினரின் குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன. ஆவாக்குழு உறுப்பினர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துகின்றபோதும், சிலர் நீதிமன்றத்தின் ஊடாக பிணையைப் பெற்று வெளியேறுகின்றனர். இவ்வாறு வெளியேறுபவர்கள் தொடர்ந்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். மாவட்டத்தில் இணுவில் மற்றும் கொக்குவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே ஆவாக்குழுவில் அதிகம் இருக்கின்றனர். தமிழகத்தின் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் இவ்வாறு குழுக்களை அமைத்து செயற்படுகின்றனர். இவர்களின் உறவினர்கள் பலர் வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் பணத்தில் இளைஞர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் காணப்படும் வேலைவாய்ப்பு பிரச்சினை உள்ளிட்டவையும் இந்த நிலைமைக்குக் காரணமாகும் என்றார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *