பருத்தித்துறை நீதிமன்றிலும் வழக்கு?

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு எதிராக அங்கிருந்து அவர்கள் வெளியேறாத சந்தர்ப்பத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய மருதங்கேணி பிரதேச செயலகம் முற்பட்டுள்ளது.
முன்னதாக வாடிகளில் அனுமதியின்றி தங்கியிருந்து கடலட்டை பிடிப்பவர்களை 48 மணி தேரத்தில் வெளியேறுமாறு பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டாயிரம்  பேர் அரச நிலத்தை அனுமதியின்றி ஆக்கிரமித்து அங்கே வாடி அமைத்து தங்கியிருந்து கடல் அட்டை பிடித்து வருகின்றனர்.இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நியாய ஆதிக்க எல்லைக்குள் வாடி அமைத்தவர்களிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு மீனவர்களை உடன் வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் குறித்த மீனவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

இதேநேரம் வடமராட்சி கிழக்குப் பகுதியின் பருத்தித்துறை நீதிமன்ற நியாய ஆதிக்க எல்லைப்பரப்பிற்குள் உள்ள குறித்த தொழிலில் ஈடுபடும் பிற மாவட்ட மீனவர்கள் தொடர்ந்தும் அரச நிலத்தில் அனுமதியின்றி தங்கியிருந்து கடல் அட்டை பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களிற்கு எதிராகவும் அரச நிலத்தை அத்துமீறி அபகரித்து குடியிருப்பதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் வகையில் ஏற்கனவே ஒரு தடவை அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் நாகர்கோவில் கிழக்கு , நாகர்கோவில் மேற்கு பகுதியில் இரண்டாவது அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அரச நிலத்தில் அத்துமீறி குடியிருப்பதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் வகையில் முன் அறிவித்தலாகவும் அவர்களிற்கான இறுதி சந்தர்ப்பமாகவும் அறிவுறுத்தல் ஒட்டப்பட்டுள்ளது.இதன் பிரகாரம் குறித்த 48 மணித்தியாலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவுறுகின்றபோதும் அங்கிருந்து அவர்கள் வெளியேறாத சந்தர்ப்பத்தில் எதிர்வரும் திங்கட் கிழமை நீதிமன்றில் வழக்குத் தாக்க ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *