யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அதிசயம்!: பக்திப் பரவசத்தில் அடியார்கள்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நாகமொன்று கடந்த சில தினங்களாக மலர்களால் அம்பாளுக்குப் பூசை செய்து வருவது பக்தர்கள் மத்தியில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகமொன்று தனது வாயால் மலர்களை எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களால் அழகாக அர்ச்சிக்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த அற்புதக் காட்சியை கண்ட பக்தர்கள் பக்திப் பரவசத்தில் அம்மன் புகழைப் பாடிப் பரவி வருகின்றனர்

மேற்படி செய்தியை அறிந்து பல நூற்றுக் கணக்கான பக்தர்கள் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தை நோக்கிப் படையெடுத்தும் வருகின்றனர். இன்னும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் ஆலயத்தில் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நயினாதீவு அம்மன் நாகபூசணிஅம்மன் எனப் பெயர் பெற்ற அதிசய வரலாற்றை மீட்டிப் பார்க்கும் அற்புதத் திருக் காட்சியாக குறித்த சம்பவம் அமைந்துள்ளது.

இவ்வாலயம் உருவான அற்புத வரலாற்றை மீண்டுமொரு தடவை நாம் மீட்டிப் பார்ப்பது இந்தச் சந்தர்ப்பத்தில் பொருத்தமானதென நான் கருதுகின்றேன்.

தமிழின் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் மணிபல்லவம் எனக் கூறப்படுகின்ற இத்தீவில் கண்ணகைத் தெய்வ வழிபாடு இருந்துள்ளது. ஈழத்தில் கண்ணகை வழிபாட்டுப் பாரம்பரியம் தொன்மை மிக்கதொரு வழிபாட்டுப் பாரம்பரியமாக இருந்து வந்துள்ளது. .

முன்னொரு காலத்தில் இத்தீவின் வணிகர் ஒருவர் வர்த்தக நோக்கில் வத்தை என்று சொல்லப்படுகின்ற பொதிகள் ஏற்றும் பாய்மரச்சரக்குப்படகில் இத்தீவிருந்த பயணித்த போது கடலின் நடுவில் தெரிந்த பாறையொன்றில் கருடனொன்று இருந்து ஆர்ப்பரிப்பதைக் கண்டிருக்கிறார். அவர் தன் படகினைக் கருடனிருந்த பாறையை அண்மித்ததாகச் செலுத்த கருடன் மேலெழுந்து பறந்துவிட்டது.

ஆனால், அப்போதுதான் அந்த அதிசயத்தை அவர் கண்டார். கருடன் இருந்தா பாறைக்கு எதிராக இருந்த மற்றொரு பாறையின் இடுக்கில் ( இன்றும் இக்கடற்பகுதியிலுள்ள இருபாறைகளை, அப்பாறைகள் என்றே அடையாளங்காட்டுகின்றார்கள்.) மறைந்திருந்த ஒருநாகம் வெளிப்பட்டு நயினாதீவை நோக்கி நீந்துகிறது.

அதன் வாய்பகுதியில் பூ ஒன்று தென்படுகிறது. ஆச்சரியத்தோடு தன் அன்றாடவேலைகளுக்குள் மூழ்கிவிட்ட வர்த்தகர் அன்றைய பொழுதினை நிறைவு செய்து தூக்கத்திற்குச் சென்று விட்டார்.

தூக்கத்திலிருந்த வர்த்தகரின் கனவில் தோன்றிய அம்மன், நயினாதீவில், குறிப்பிட்ட இடத்தில், தான் சுயம்புவாகத் தோன்றியிருப்பதாகவும், தனக்கு ஆலயம் அமைக்கும்படிகோரியதாகவும், அதன்பின் வர்த்தகர் ஊர்மக்களிடம் இக்கனவைக் கூறி, ஆலயம் அமைத்ததாகவும், அதன்பின் அவர் தொழில் சிறந்து வாழ்ந்ததாகவும் சொல்வர்.

இப்படி ஆலயம் அமைந்தபின்னும், அதற்கு முன்னதாகவும் காலைவேளைகளில் சுயம்புவாக எழுந்த அம்மனின் மேற்பகுதியில் அன்றலர்ந்த மலர் ஒன்றிருப்பதைக் கவனித்த பலர் இது எவ்விதம் வருகின்றதென ஆச்சரியமுற்றவேளையில் நயினாதீவிற்கு அண்மித்துள்ள மற்றொரு தீவான அனலைதீவிலிருந்து ஒரு நாகம் பூவோடு கடலில் நீந்தி வந்து ஆலயத்துள் செல்வதைக் கண்டிருக்கின்றார்கள்.

அனலைதீவின் தென்பகுதிக்கரையை புளியந்தீவு எனச் சொல்வார்கள். இப் புளியந்தீவில் நாகேஸ்வரன்கோவில் எனும் சிவாலயம் ஒன்றுண்டு.

அக்கோவிலின் வழிபாட்டு ஆரம்பம் ஆலயபிரகாரத்திலுள்ள அரச மரமும் வேப்பமரமும், இணைந்திருக்குமிடத்திலுள்ள புற்றிலுள்ள நாகத்தினை வழிபாடு செய்வதிலிருந்து ஆரம்பமாகிறது. இப்புற்றிலுள்ள நாகமே தினந்தோறும் நயினாதீவிலுள்ள அம்மனைப் பூக்கொண்டு வழிபாடியற்றி வந்தது என்பது மக்கள் நம்பிக்கை.

இந்த நாகம் பூசனை செய்தபடியால் தான் நயினாதீவு அம்மன் நாகபூசணிஅம்மன் எனப் பெயர் பெற்றதாகச் சொல்வார்கள். ஆனால், இதனை நாம் நேரில் காணவில்லை.

ஆலய வரலாற்று நூல்களிலும், சமய பாட நூல்களிலும் தான் கேள்விப்பட்டிருக்கின்றோம். கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கும் அம்பாளின் அற்புத லீலையை நேரில் காணும் பாக்கியம் கிடைத்திருப்பதும் நாம் செய்த தவப்பேறே.

வாருங்கள் நாமும் நயினாதீவுக்குப் போவோம்…

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *