வங்கியின் நகைகளை விடுவிக்க உத்தரவு

யாழ்.திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நகைகள் பணியாளர்களால் மோசடி செய்யப்பட்ட குற்றச்சாட்டில் மீட்கப்பட்ட வாடிக்கையாளர்களின் தங்க நகைகளில் 143 பொதிகளை விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்தரன் நேற்று (08) திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

வழக்கில் சந்தேகநபர்களான 6 வங்கி உத்தியோகத்தர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அவர்களிடம் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்களான தங்க நகைகள் பொதிகள் அவசியமில்லை என்று மன்று முடிவுக்கு வருகின்றது.

அதனால் முறைப்பாட்டாளரான வங்கியால் முன்வைக்கப்பட்டுள்ள 143 தங்க நகைப் பொதிகளை விடுவிக்கப்படுகின்றது என நீதிவான் தெரிவித்தார்.

குறித்த அரச வங்கியின் திருநெல்வேலிக் கிளையின் அடகுப் பிரிவில் பணியாற்றிய உத்தியோகத்தர்களால் வாடிக்கையாளர்களின் நகைகள் மோசடி செய்யப்பட்டன. கடந்த 2012ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அந்நிலையில்,  வங்கிக் கிளையின் உத்தியோகத்தர் ஒருவர் கோப்பாய் பொலிஸில் சரணடைந்தார். அவரால் நகைகள் சில கையளிக்கப்பட்டன. குறித்த நபர் உட்பட 6 உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் வங்கிக் கிளையில் வாடிக்கையாளர்களால் அடகு வைக்கப்பட்ட நகைகளில் 16 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டதாக அறிய வந்தது.

அதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 193 பொதிகள் மீட்கப்பட்டன. அவை வழக்கின் சான்றுப் பொருளாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டன.

இந்த வழக்கில் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் நகைகளை விடுவிக்கவேண்டும் என்று முறைப்பாட்டாளரான வங்கி சார்பில் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

கடந்த 6 வருடங்களாக அந்த நகைகளை வாடிக்கையாளர்களுக்கு மீள வழங்கத் தவறியதால் வங்கிக்கு அவப் பெயர் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டி வங்கியின் சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார். அந்நிலையில்  நீதிமன்றம் நகைகளை விடுவித்து கட்டளையிட்டது.

இதேவேளை குறித்த வங்கியின் அடகு நகை மோசடி தொடர்பில் தனக்கு நீதிபெற்றுத் தருமாறு கோரி வாடிக்கையாளர் ஒருவரால் நிதி நிறுவனங்கள் மீதான அதியுச்ச அதிகாரம் கொண்ட நிதியியல் ஒம்புட்ஸ்மன் அலுவலகத்தில் 2014ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்டது.

தமது நகைகளை மீட்டுத்தருமாறும், இழப்பீடு பெற்றுத் தருமாறும் கோரி அந்த முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம்  விசாரணைகளின் முடிவில் முறைப்பாட்டாளரின் நகையை மீளளிப்பதுக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஒம்புட்ஸ்மன் பரிந்துரைத்த போதிலும், நகையை மீளளிப்பதற்கு வங்கி நடவடிக்கை எடுக்காத நிலையில், குறித்த வாடிக்கையாளர் மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *