“விஜயகலா மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் பாய்ந்திருக்க வேண்டும்”

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மீது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழேயே வழக்குத் தொடரப்பட்டிருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நல்லாட்சி அரசாங்கம் ராஜபக்ஸவினரை நீதிமன்றங்களுக்கு கொண்டுவந்துதான் மகிழ்ச்சியடைந்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், எம்மை நீதிமன்றங்கள் மட்டுமன்றி, சிறைச்சாலைகளில் அடைத்தால் கூட நாம் மக்களுக்கான எமது போராட்டத்தை ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை.

மக்களுக்கான எமது இந்த பயணத்தை இவ்வாறான தடுப்புக்களை இட்டு நிறுத்திவிட முடியும் என்று அரசாங்கம் கருதினால், அது பிழையென்றே கூறவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தற்போது அதிவேக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அதிவேகப்பிணையானது நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரனுக்கும் ஹிருணிகாவுக்கும் மட்டும்தான் இந்த நாட்டிலேயே வழங்கப்படும்.

விஜயகலா கூறிய கருத்தானது மீண்டும் பயங்கரவாதத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே அமைந்திருத்தது. ஆனால், அவர் மீது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டிருக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள், இராணுவத்தினர், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த இரண்டு இளைஞர்கள் என பலருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்தான் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

எனினும், பயங்கரவாதத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க வேண்டும் என்றுக் கூறிய விஜயகலா மகேஸ்வரனுக்கு மட்டும் இந்த சட்டத்தின் கீழ் வழக்குத் தொடராமல், பிணையும் வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நல்லாட்சி அரசாங்கம் விடுதலை செய்யும் என்ற நம்பிக்கையில், இன்னும் சிறைச்சாலையில் பலர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள், தொடர்பிலெல்லாம் கதைக்காமல், பிரபாகரனுக்கு உயிர்க்கொடுக்க வேண்டும் என்று கூறிய விஜயகலா மனேஸ்வரனுக்கு மட்டும் பிணை வழங்கியுள்ளமைத்தான் இந்த விடயத்தில் எமக்குள்ள பிரச்சினையாக இருக்கிறது.

அரசாங்கமானது தமது தரப்பினருக்கு ஒரு சட்டத்தையும் எதிரணியினருக்கு ஒரு சட்டத்தையுமே தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதனால்தான் நாம், பொலிஸ்துறை, சட்டமா அதிபர் திணைக்களம் என்பன அரசியல் மயமாகிவிட்டதாகக் கூறிவருகிறோம். மேலும், இடைக்கால அரசாங்கம் தொடர்பிலும் தற்போது ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.

இதுதொடர்பில் எமது தரப்பில் எந்தப்பேச்சுக்களும் ஆரம்பமாகவில்லை. எமது அணியின் கட்சித்தலைவர்கள் கூடி ஆராய்ந்த பின்னர்தான், இதுகுறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கையை எடுக்கமுடியும்’ என தெரிவித்துள்ளார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *