வெளிநாடு வாழ் யாழ்ப்பாண மக்களுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு!

வெளிநாடுகளில் உள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த காணி உரிமையாளர்களது காணிகள் சுத்தமில்லாது காணப்பட்டால், சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண பொலிஸ் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ணகுலசூரிய அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய கேட்போர்கூடத்தில் இன்று இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ணகுலசூரிய,

யாழ்ப்பாண நகரத்தின் பிரதான வீதிகளான ஸ்டான்லி றோட், கே.கே.எஸ் வீதி மற்றும் பிரதான வீதி உட்பட பல்வேறு முக்கிய வீதிகளிலும் பொதுமக்களால் குப்பைகள் கொட்டப்படுகின்றது. இதனை பொலிஸார் தடுக்கவேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறு பொதுமக்களினால் குப்பைகள் பொருத்தமில்லாத இடங்களில் கொட்டப்படுகின்றது. இதற்கு கழிவகற்றல் செயன்முறை உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படாமையே காரணமாகும்.

கொழும்பு போன்ற நகரங்களில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்கென பிரத்தியேகமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியன பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு பொருத்தமான இடங்களை உடனடியாக அடையாளப்படுத்திகொடுக்கவேண்டும்.

இவ்வாறு குப்பைகள் கொட்டுவதற்கு இடங்கள் அடையாளப்படுத்தப்பட்ட பின்னரும் பொதுமக்கள் வீதிகளில் குப்பைகளை கொட்டினால் பொலிஸார் உடனடியாக சட்டநடவடிக்கை எடுப்பார்கள்.

இதேவேளை,சட்டத்திற்கு புறம்பான வகையில் வர்த்தக நிலையங்களின் கழிவுகளை வெளியேற்றிய 37 வர்த்தகர்கள் மீது இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீதிகளில் குப்பைகளைக்கொட்டிய 7 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தடைசெய்யப்பட்ட பொலித்தீன்களை பாவித்த 40 பேர் சட்ட நடவடிக்கைக்குள்ளாக்கப்பட்டனர். 4 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனையின்போது 26 வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அத்தோடு இனிவரும் காலங்களில், வெளிநாடுகளில் உள்ள காணி உரிமையாளர்களது காணிகள் சுத்தமில்லாது காணப்பட்டால், சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை உரிமையாளர்கள் வெளிநாடுகளில் உள்ள காணிகளில் சட்டவிராமாக குப்பைகளை போடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை இம்மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும், ஒரு இடம் பொதுவாக தெரிவு செய்யப்பட்டு சிரமதானம் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பொலிஸ்பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ணகுலசூரியவின் தலைமையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய கேட்போர்கூடத்தில் இன்று இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு கூட்டத்தில், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொதுசுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *