12 வயது சிறுமிக்கு காதலனால் இழைக்கபட்ட அநீதிகள்!

இலங்கை 12 வயது பாடசாலைச் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகவும் கூரிய ஆயுதங்களால் கொடுமைப்படுத்திய சம்பவம் பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.

19 வயது இளைஞனின் கொடுமைக்குட்பட்ட சிறுமி, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை தம்பசிட்டி, பண்டாரி அம்மன் கோவிலடியில் இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது.

சிறுமியின் பெற்றோரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுமி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அத்துடன், சிறுமியைக் கொடுமைப்படுத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறுமியை நேற்று மாலை தொடக்கம் காணவில்லை என பெற்றோர் தேடியுள்ளனர். ஊரவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்றிரவு 11 மணியளவில் இளைஞனின் வீடு தேடிச் சென்ற போது, சிறுமி அங்கு கையில் காயங்களுடன் காணப்பட்டுள்ளார். சிறுமியை மீட்ட பெற்றோர் மந்திகை வைத்தியசாலையில் சேர்த்துடன், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

மந்திகை வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை வழங்கப்பட்டு மருத்துவ சோதனை மற்றும் மேலதிக சிகிச்சைக்காக சிறுமி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பெண் நோயியல் பிரிவுக்கு நேற்று வியாழக்கிழமை மாற்றப்பட்டார். அவரது கைகளில் பிளேட் போன்ற கூரிய ஆயுதத்தால் வெட்டி சித்திரவதைக்குள்ளாகியுள்ளார் என்று ஆரம்ப மருத்துவ சோதனைகளின் பின் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் சிறுமி பாலியல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தியுள்ளார் என்று மருத்துவ சோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “சிறுமிக்கு வயது 12. குற்றஞ்சாட்டப்படும் இளைஞனுக்கு வயது 19. அவர்கள் இருவரும் கடந்த 3 மாதங்களாகக் காதலித்துள்ளனர். சிறுமிக்கு ஆசை வார்த்தை பேசி இளைஞன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலமாக சிறுமிகள் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பெற்றோரின் அக்கறையின்மையே இவ்வாறான சம்பவங்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைக்குச் செல்லும் பெண் பிள்ளைகளில் பெற்றோர் அக்கறை செலுத்துவது அவசியம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தச் சம்பவமும் அதுபோன்ற தவறால்தான் ஏற்பட்டது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *