விக்னேஸ்வரனை கொலை செய்ய DIG நாளக டி சில்வா திட்டமிட்டார்

பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கையிடப்பட்ட என்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து என்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்ச குடும்பம் மீதான கொலைச் சதியுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாதான் தன் மீதான கொலை முயற்சிக்கும் காரணமானவர் என்றும் விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு!

வடமாகாண முதலமைச்சராக என்னுடைய பதவிக்காலம் முடிந்ததன் பின்னர் என்னுடைய பிரத்தியேக பொலிஸ் பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து எனக்கு பாதுகாப்பு வழங்கி வந்துள்ளனர்.

சில காலங்களுக்கு முன்னர் என்னுடைய உயிருக்கு ஆபத்து என்பது சம்பந்தமாக பொலிஸ் மா அதிபருக்கும் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் தெரிவித்திருந்தேன். அது சம்பந்தமான செய்திகளை எமக்கு வழங்கியவர் அம்பலாங்கொடையைச் சேர்ந்த டி சில்வா என்பவர்.

நீங்கள் யாழ்ப்பாணம் வந்த போது உங்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் இது பற்றித் தெரிவித்திருந்தேன். இதில் சந்தேகத்திற்குரியவராகக் கணிக்கப்பட்டவர் தற்போது கைது பண்ணப்பட்டிருக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா என்பவர்.

மேற்படி உயிராபத்து சம்பந்தமாக பொலிஸ் மா அதிபரும் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் அவர்களுக்கு இது பற்றி எழுத்தில் தெரிவிக்குமாறு கோரியிருந்தார்கள். இது என்னால் செய்யப்பட்டது.

இந்தக் கடிதத்தின் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. என்னுடைய வாசஸ்தலத்திற்குரிய பாதுகாப்பு கைவாங்கப்பட்டதெனினும் என்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு இற்றைவரையில் தொடர்ந்து வந்துள்ளது.
இன்று காலை யாழ்ப்பாண பொலிஸ் தலைமையக மேற்பார்வையாளர் என்னுடைய பொலிஸ் பாதுகாப்பு அலுவலர்களை உடனே பொலிஸ் நிலையத்தில் வந்து கையெழுத்திடுமாறு கோரியிருந்தார்.

நான் தற்போது கொழும்பில் என்னுடைய பாதுகாப்பு அலுவலர்களுடன் தங்கியிருக்கின்றேன். எனினும் இரு அலுவலர்கள் இன்று காலை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கையிடப்பட்ட என்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து என்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு மேன்மை தங்கிய உங்களிடம் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன். கிழக்கு மாகாண முன்னைய முதலமைச்சருக்கும் தற்போதும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக அறிகின்றேன்.

நன்றி
இப்படிக்கு

நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *