
கஞ்சா கடத்தல் மற்றும் வாள்வெட்டுக் குழு தொடர்பில் பொதுமக்கள் எந்தப் பயமுமின்றி தகவல்கள் வழங்க முடியும் என்று வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னான்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கேசன்துறையில் உள்ள வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது,
கஞ்சா கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் தேவையான தகவல்களை பொலிஸாருக்கு வழங்க முடியும். தகவல் வழங்குவது தொடர்பாக இரகசியம் பேணப்படும். வேறு பிரச்சினைகள் ஏற்பட்டால், அந்தப் பிரச்சினைகளை நாங்கள் பொறுப் பேற்றுக் கொள்வோம்.

பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்களிடம் தகவல் முடியும். வடமாகாண மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம், பல கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

வடமாகாணத்தை அச்சுறுத்திய வாள்வெட்டுக் குழுவைக் கட்டுப்படுத்த வடமாகாண மக்கள் வழங்கிய தகவல் உதவியது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு சிலர் கைது செய்யப்படவில்லை. அவர்களையும் மிக விரைவில் கைது செய்வோம்.

நாவாந்துறையில் இந்த வாரம் இடம்பெற்ற சிறுமி கடத்த விவகாரம், ஆராயப்பட்டு வருகிறது. எவரும் முறைப்பாடு வழங்கவில்லை. சந்தேகநபரை அடித்துக் காயப்படுத்தியதாலேயே எவரும் முறைப்பாடு செய்ய முன்வரவில்லை. பொலிசாரின் சட்டத்தை மக்கள் கையிலெடுக்க முடியாது.

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, இளவாலை, அச்சுவேலிப் பகுதிகளில் கஞ்சா கடத்தலை கட்டுப்படுத்த சிறப்புக் குழுக்கள் மூலம் இன்றிலிருந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றார்.