இலங்கையிடம் உண்மையான வெளிப்படையான உறவை எதிர்பார்ப்பதாக‌ அமெரிக்கா தெரிவிப்பு

இலங்கை அனைத்து நாடுகளுடனும் உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டாலும் அது வெளிப்படைத்தன்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் முதன்மை பிரதி உதவிச் செயலர் தோமஸ் வஜ்டா தெரிவித்தார்.

கடந்த வாரம், கொழும்பில் பாத் பைன்டர் அமைப்பின் ஏற்பாட்டில் நடந்த “இந்தோ-பசுபிக் பற்றிய அமெரிக்க பார்வை மற்றும் இலங்கையின் வகிபாகம்“ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். “இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு. இலங்கையின் இறைமையை நாங்கள் மதிக்கிறோம். ஏனைய நாடுகளே இந்தோ- பசுபிக்கில் எமது செயற்பாடுகளை வழிநடத்துகின்றன.

அமெரிக்காவைப் போன்று, பிராந்தியத்திலும், உலகம் முழுவதிலும், எல்லா நாடுகளுடனும் இலங்கை பரஸ்பர நலன்களை அளிக்கக் கூடிய ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் என்று நாங்கள் முழுமையாக எதிர்பார்க்கிறோம். இருப்பினும், அத்தகைய உறவுகள் அனைத்தும் வெளிப்படையானதாகவும், உண்மையானதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுக்கும் நீண்டகாலம் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

2017இல் இந்தோ-பசுபிக்குடனான அமெரிக்காவின் இருதரப்பு வணிகம் 1.8 ட்ரில்லியன் டொலராக இருந்தது. அதில் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நேரடி முதலீடு 1 பில்லியன் டொலராகும். இது கடந்த பத்தாண்டை விட இரண்டு மடங்கு அதிகம். இது இந்தப் பிராந்தியத்தின் மிகப் பெரிய வெளிநாட்டு முதலீடு ஆகும்.

பொருளாதார ஒத்துழைப்புகளையும், முதலீடுகளையும் இருதரப்பு வணிகத்தையும், இந்தோ – பசுபிக்கில் விரிவுபடுத்துவதன் மூலம், குறிப்பாக இலங்கை அமெரிக்கா இடையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்தப் பிராந்தியத்தில் இலங்கை பாரிய செல்வாக்கை கொண்டுள்ளது. இந்த வாய்ப்புகளில் இருந்து அது கணிசமான நலன்களைப் பெறவுள்ளது.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இன்னும் வலுவான ஈடுபாட்டிற்கு அமெரிக்கா, கவனத்தை திருப்பும்போது, இலங்கையை ஒரு மதிப்புமிக்க நண்பனாகவும், அந்த செயல்முறையில் ஒரு தலைவராக இருக்கும் பங்காளியாகவும் பார்க்கிறது. இந்த முயற்சிகளில் அனைத்து மட்டங்களிலும் இலங்கையின் ஈடுபாட்டை நாங்கள் மதிக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *