ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு பிணை!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவர் தொடர்பான வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான், அன்றைய தினம் சாட்சியையும் மன்றில் முன்னிலையாக அழைப்புக் கட்டளை அனுப்புமாறும் உத்தரவிட்டார்.

கொக்குவில் கருவப்புலம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் புகுந்த கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்தது. வன்முறைச் சம்பவத்தையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், ஊடகவியலாளர்களும் செய்திகளைப் பதிவு செய்து கொண்டிருந்த ஓர் ஊடகவியலாளரை கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டார். 

சம்பவத்தையடுத்து ஊடகவியலாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஊடகவியலாளரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அவரது பணியிலிருந்து இடைநீக்கப்பட்டதுடன், விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

ஊடகவியலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். வழக்கு மன்றில் அழைக்கப்பட்ட போது குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மன்றில் முன்னிலையாகவில்லை. அவர் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையானார்.

சந்தேகநபர் உடல்நலக் குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

அதனால் சந்தேகநபரை வைத்தியசாலையில் வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிவான் ஏ.எஸ்.பி.போல், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்றார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 7 ஆம் விடுதியில் சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு மன்று கூடியது. சந்தேகநபர் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையானார்.

“வன்முறையை அடுத்து பெருமளவானோர் அங்கு கூடியிருந்தனர். தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். அத்துடன் மோப்பநாயும் அங்கு கொண்டுவரப்பட்டது.

அதனால் அங்கு கூடியிருந்தவர்களை வெளியேற்றினேன். அப்போதுதான் ஊடகவியலாளர் எனத் தெரியாது முறைப்பாட்டாளரையும் வெளியேற்றினேன். எனினும் அவரை நான் தாக்கவில்லை” என்று பொலிஸ் அதிகாரியான சந்தேகநபர் கூறினார்.

சமூகத்துக்காகவே பத்திரிகையாளர்கள் கடமையாற்றுகிறார்கள். அவர்களின் கடமைக்கு இடையூறு வழங்கக் கூடாது. பத்திரிகையாளர்களை தாக்கவோ தாக்க முயற்சிக்கவோ கூடாது என நீதிவான் இதன்போது குறிப்பிட்டார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *