தும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் கைகள் சிக்குண்டு குடும்ப பெண்ணுக்கு நிகழந்த பரிதாபம்!

தும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் தவறி கைகள் இரண்டும் சிதைவடைந்த நிலையில் சேர்க்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவரின் இடது கை பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டது. எனினும் வலது கை அறுவைச் சிகிச்சைக்குட்படுத்த முடியாத நிலையில் அகற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை  நிபுணர்கள் கே. இளஞ்செழியபல்லவன், எஸ்.செல்வக்குமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவ அணியின் சுமார் 7 மணி நேரப் போராட்டத்தின் பின் இடது கை காப்பாற்றப்பட்டது.

கிளிநொச்சி முரசுமோட்டையைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க 5 பிள்ளைகளின் தாயார், தும்பு அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று மாலை தும்படிக்கும் போது, தும்படிக்கும் இயந்திரத்துக்குள் இரண்டு கைகளும் சிக்குண்டு சிதைவடைந்தன.

அவர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து நேற்று இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அந்தப் பெண் படுகாயமடைந்து சுமார் 6 மணித்தியாலங்களுக்கு மேலாகியதால் அவரது கைகளை பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சைக்கு உள்படுத்துவதில் மருத்துவ நிபுணர்களுக்கு சவாலாகியது. எனினும் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மருத்துவ நிபுணர்கள் கே.இளஞ்செழியபல்லவன், எஸ்.செல்வக்குமார் தலைமையிலான மருத்துவ அணி, அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளிக்க முடிவு செய்தனர்.

இன்று அதிகாலை வரை சுமார் 7 மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் பெண்ணின் இடது கை பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டது. எனினும் வலது கை முற்றாக அகற்றப்பட்டது.

இதேவேளை, பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர் கே.இளஞ்செழியபல்லவன், கண்டி பேராதனை வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றலாகி வந்துள்ளார். அவர் இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால்வரை மக்களுக்கு சேவையாற்றிய மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *