இலங்கை மீது UN மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம்!

1. புதிய தீர்மானம் (இணைப்பு HRC/40/L.1)

இலங்கை மீது புதிய தீர்மானம் ஒன்றினை இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, மாசடோனியா, மான்டெநெக்ரோ ஆகிய நாடுகள் கூட்டாக முன்வைத்துள்ளன. 2015 ஆண்டு தீர்மானத்தின் அனைத்து பிரிவுகளையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் இந்த புதிய தீர்மானம், இதனை குறிப்பிட்ட கால எல்லைக்குள் செயலாக்கும் திட்டத்தையும் வகுக்க வலியுறுத்துகிறது.

HRC/40/L.1 Promoting reconciliation, accountability and human rights in Sri Lanka – புதிய தீர்மானம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் மார்ச் 21 ஆம் நாள் நிறைவேற்றப்பட இருக்கிறது.

2. கால அட்டவணையை உருவாக்க ஐநா மனித உரிமைகள் ஆணையர் பரிந்துரை! (இணைப்பு HRC/40/23)

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் பற்றி வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி 2015-ஆம் ஆண்டு  ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் நான்கு ஆண்டுகளாகியும், குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்கவில்லை.

மேற்கண்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை ஐநா மனித உரிமைகள் ஆணையர் 8.3.2019 அன்று வெளியிட்டார். அதில் “2015ஆம் ஆண்டில் இலங்கை அரசு தானே ஒப்புக்கொண்ட, ஐநா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை செயல்படுத்தாதது மிகப்பெரிய அளவில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து பிரிவுகளையும் முழுமையாக செயல்படுத்துவதற்கான கால அட்டவணையை உருவாக்க வேண்டும். இலங்கையின் சர்வதேச குற்றவாளிகளை தண்டிக்க சர்வதேச விசாரணை முறையை உருவாக்குவது உள்ளிட்ட மாற்று வழிகளை உலக நாடுகள் பரிசீலிக்க வேண்டும்” என ஐநா மனித உரிமைகள் ஆணையர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கை ராணுவம் தமிழர்களுக்கு எதிராக செய்த கொடூர குற்றங்களை மறந்துவிட வேண்டும். குற்றவாளிகளை மன்னித்துவிட்டு, எதிர்கால அமைதியை நிலைநாட்டுவதே முக்கியம்’ என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறி வருகிறார். இதற்கும் பதிலளிக்கும் விதமாக, “போர்க்குற்றம் உள்ளிட்ட பன்னாட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கக் கூடாது என்பதுதான் பன்னாட்டு சட்டம். அதுதான் ஐக்கிய நாடுகள் அவையின் கொள்கை” என்று ஐநா மனித உரிமைகள் ஆணையர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

3. முரண்பட்ட நிலையில் இலங்கை அரசு!

‘சிங்களப் படைகள் நடத்திய போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த முடியாது. 2015 ஆம் ஆண்டு ஐநா தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேற வேண்டும் என்பதே தனது விருப்பம்’ என்று கூறிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, தனது சார்பாக மூன்று நபர்களை ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்திற்கு அனுப்பியுள்ளார்.

அதே நேரத்தில் இலங்கை அதிபரின் நிலைப்பாட்டுக்கு எதிராக, இங்கிலாந்து நாடு கொண்டுவரும் புதிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கப்போவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து – புதிய தீர்மானத்தை தாமும் கூட்டாக முன்மொழிவதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக ஐநாவில் தெரிவித்துள்ளது. இதனால், வாக்கெடுப்பு ஏதுமின்றி புதிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவத்தது போல, இலங்கை அரசு தீர்மானத்திலிருந்து வெளியேறாது).

4. இணைப்பு: அறிக்கை

இந்த விவகாரம் குறித்து 9.3.3019 அன்று வெளியிட்ட அறிக்கையில் “2015 ஆம் ஆண்டு தீர்மானத்தை குறித்த காலத்தில் செயல்படுத்த கால அட்டவணையை உருவாக்க வேண்டும் எனவும், இலங்கை செயல்படாத நிலையில் குற்றவாளிகளை தண்டிக்க சர்வதேச தீர்ப்பாயம் அமைப்பது உள்ளிட்ட மாற்று நடைமுறைகளை பரிசீலிக்க வேண்டும் எனவும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்திருப்பது முக்கியமானதாகும். இத்தகைய சூழலில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பில் இருந்து இலங்கை காலம் கடத்தி தப்பிக்க முற்சிப்பதை இந்தியா அனுமதிக்கக் கூடாது.

‘மாற்று விசாரணை முறையை உருவாக்குவதை உலக நாடுகள் பரிசீலிக்க வேண்டும்” என ஐநா மனித உரிமைகள் ஆணையர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதற்கு ஏற்ப – இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை விசாரித்து, ஆவணப்படுத்த, சிரியா, மியான்மர் நாடுகளுக்காக அமைக்கப்பட்டது போன்று, சர்வதேச பொறிமுறையை (International, Impartial and Independent Mechanism -IIIM) உருவாக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்த வேண்டும் – என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டார்கள்.

பின்னணி

இலங்கைப் போரின் போது நடைபெற்ற சர்வதேசக் குற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணைய விசாரணைக்கு 2014 ஆம் ஆண்டில் ஆணையிடப்பட்டது. ஐ.நா மனித உரிமை ஆணைய விசாரணைக் குழுவின் அறிக்கையில், இலங்கைப் போரில் போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட அட்டூழிய குற்றங்கள் (Atrocity Crimes) நடந்தது உறுதி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் பற்றி வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30-ஆவது கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பின்னர், இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற 34-ஆவது கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு, மீண்டும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதனை மீண்டும் விவாதிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பு : கால நீட்டிப்பு என்பது தவறான வாதம்

ஐநா மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு மீண்டும் கால அவகாசம் அளிக்கப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது. இது ஒரு தவறான புரிதல் ஆகும். ஈழத்தில் நடத்தப்பட்ட கொடூர குற்றங்கள் குறித்து சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் ஒரே இடமாக ஐநா மனித உரிமைகள் அவை மட்டுமே உள்ளது. அடுத்த இலக்கான ஐநா பாதுகாப்பு அவைக்கும் ஐநா பொதுச்சபைக்கும் இதனை கொண்டு செல்ல வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கை ஆகும்.

இவ்வாறு, ஈழத்தமிழர் நீதிக்கான சர்வதேச போராட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துவது என்பது, ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் நடக்கும் விவாதத்திற்கு மூடுவிழா நடத்துவது அல்ல. மாறாக, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இந்த விவகாரம் பேசப்படும் அதே நேரத்தில் இதனை அதற்கும் மேலாக உள்ள ஐநா அமைப்புகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே சரியானதாகும்!

இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரங்கள் போன்றே மியான்மர், சிரியா ஆகிய நாடுகளிலும் பன்னாட்டு குற்றங்கள் நடத்தப்பட்டன. அந்த நாடுகளின் விவகாரங்கள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்படும், கண்காணிக்கப்படும் அதே சூழலில் தான் – அவை ஐநா பாதுகாப்பு அவையிலும் பேசப்படுகின்றன.

எனவே, ஐநா மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை அளித்த வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படும் காலம் வரை, ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் – இலங்கை மீதான செயல்திட்டத்தை ஐநா மனித உரிமைகள் பேரவை நீட்டித்துக்கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு ஜெனீவாவில் இந்த விவகாரம் பேசப்படும் அதே சூழலில் இதனை ஐநா பாதுகாப்பு அவைக்கும் ஐநா பொதுச்சபைக்கும் கொண்டு செல்ல தமிழர்கள் தீவிரமாக முயற்சி எடுக்க வேண்டும். 

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *