யாழ் அரச அதிபரின் பொறுப்பற்ற செயல் – ஊர்காவற்றுறை மக்கள் விசனம்

யாழ்ப்பாணம்- ஊா்காவற்றுறை பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட குடிநீா் விநியோக பவுசா்கள் மீள பெறப்பட்டு ஏற்கனவே 8 பவுசா்கள் சேவையில் ஈடுபடும் கரைநகா் பிரதேசத்திற்கு வழங்கப்பட்டமை தொடா்பில் பெரும் சா்ச்சை உருவாகியிருக்கின்றது. 

யாழ்ப்பாண மாவட்டச் செயலரின் அறிவுறுத்தலுக்கு அமையவே தமக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பவுசர் வாகனம் மீளப்பெறப்பட்டு காரைநகர் பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்டதாக ஊர்காவற்றுறை பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காரைநகரில் குடிதண்ணீர் விநியோகப் பங்கீட்டு பற்றிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைத் தவிர்த்து, அங்கு ஏற்கனவே 8 பவுசர் வாகனங்கள் உள்ளநிலையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலர் ஊர்காவற்றுறை மக்களுக்காக வழங்கப்பட்ட பவுசர் வாகனத்தை மீள எடுத்தமை பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், இந்த விடயத்தில் அதிகாரிகள் பொறுப்பற்றதாகச் செயற்படும் நிலையில் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளரும் மக்களின் நலனை கருத்தில் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.காரைநகர் பிரதேச சபையிடம் 3 பவுசர் வாகனங்களும் காரை அபிவிருத்திச் சபையிடம் 2 பவுசர் வாகனங்களும் தனியார் நிறுவனம் ஒன்றிடம் 3 பவுசர் வாகனங்களும் என 8 பவுசர் வாகனங்கள் உள்ளன. எனினும் இந்த மூன்று தரப்பும் மக்களுக்கான குடிதண்ணீர் விநியோகத்தில் திட்டமிட்ட ஒரு பொறிமுறையின் கீழ் செயற்படாத்தால் குடிதண்ணீர் விநியோகத்தில் சிக்கல்நிலை உள்ளது.

இந்தச் சிக்கலுக்கு தீர்வைக் காணவேண்டிய காரைநகர் பிரதேச செயலாளரும் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரும் காரைநகர் குடிதண்ணீர் விநியோகத்துக்கு பவுசர் வாகனம் போதவில்லை என ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்கு இடர் முகாமைத்துவ அமைச்சால் வழங்கப்பட்ட பவுசர் வாகனத்தை மீளப் பெற்று காரைநகருக்கு வழங்கியுள்ளனர்.

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்ட இந்த பவுசர் வாகனத்தை தற்காலிகமாகவே காரைநகருக்கு வழங்குவதாக ஊர்காவற்றுறை பிரதேச செயலருக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பிரதேச செயலர் பிரிவுகளில் நெடுந்தீவுக்கு அடுத்ததாக ஊர்காவற்றுறை உள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.காரைநகர் பிரதேச மக்களுக்கான குடிதண்ணீர் விநியோகத்தில் உள்ள சிக்கல் – முரண் நிலையைத் தீர்ப்பதற்கு ஒரு பொறிமுறையைக் கொண்டுவரத் தவறியுள்ள அதிகாரிகள், ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பவுசர் வாகனத்தை அங்கு பயன்படுத்த முன்னதாக மீளப் பெற்று காரைநகருக்கு வழங்கியமையாலேயே சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

குடிதண்ணீர் விநியோகம் கட்டணம் செலுத்தப்பட்டே இடம்பெறுகின்ற போதும் அதனை ஒழுங்குபடுத்த அதிகாரிகளால் முடியாமல் போகும் அதேவேளை, மக்கள் பிரதிநிதிகள் எனச் சொல்லும் அரசியல்வாதிகளாலும் சீராக நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதே கவலைக்குரிய விடயமாகும்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *