வட, கிழக்கு அபிவிருத்திக்காகப் பெறப்படும் நிதி தெற்கிற்கு: அம்பலமாக்கும் விஜயகலா

வடக்கு-கிழக்கு மாகாணங்களை இனகாட்டி சர்வதேசத்திடம் நிதியைப் பெற்று தெற்கிலேயே அபிவிருத்திப் பணிகளை கடந்த அரசாங்கம் மேற்கொண்டதென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “இறுதி யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த கடந்த அரசாங்கம் இறுதியில் மாகாணங்களை இனங்கண்டு அவர்களுக்கான அபிவிருத்தியை உரிய முறையில் செய்து கொடுக்கவில்லை .

வடக்கு-கிழக்கு மாகாணங்களை இனம் காட்டி சர்வதேசத்திடம் இருந்து நிதியைப் பெற்றுக்கொண்டு தெற்கில் உள்ள ஏனைய மாகாணங்களை அபிவிருத்தி செய்துள்ள வரலாறு தான் கடந்த கால அரசாங்கத்தின் வரலாறு.

இது எங்களுக்கு ஒரு பாடமாக இருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் நாம் யாரைத் தெரிவு செய்யப் போகின்றோம். யாரினூடாக எமது கல்வியை வளர்க்கப் போகின்றோம் என்கின்ற சிந்திக்கக் கூடிய நிலையை கடந்த கால அரசாங்கம் இன்று எங்களுக்கு உருவாக்கித்தந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் பார்த்தால் இன்று எத்தனையோ பாடசாலைகள் மர நிழல்களிலும், ஓலைக் கொட்டில்களிலும் தளபாடம் இன்றி நிலத்தில் இருந்தும் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது.

எத்தனையோ ஆசிரியர்கள் தமது பாடசாலைகளுக்கான ஆசிரியர் விடுதி இல்லாமல், உரிய போக்குவரத்து வசதிகள் இல்லாமல், அவர்களுடைய குடும்பங்களை பிரிந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அந்த ஆசிரியர்கள் எமது மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினை காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலைகளை இனங்கண்டு அவற்றுக்கான நிதி உதவிகள், ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *