இலங்கை முழுவதிலுமாக அவசரகால நோயாளர் காவுவண்டிச் சேவை ஆரம்பம்!

அம்பாறையில் இன்று நடைபெற்ற ஒரு விசேட வைபவத்தில் அவசரகால நோயாளர் காவுவண்டிச் சேவை கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திரு. தரண்ஜித் சிங் சந்து, இந்திய உயர் ஸ்தானிகர், மற்றும் ஏனைய பிரமுகர்கள் வைபவத்தில் கலந்து கொண்டனர்.

இவ்வாரம்பித்தலுடன், அவசரகால நோயாளர் காவுவண்டிச் சேவைகளை நாடு முழுவதற்குமாக விஸ்தரிப்பது பூர்த்தி அடைகிறது. இலங்கையின் அனைத்து  மாகாணங்களிலும் இப்பொழுது இச்சேவை கிடைக்கப் பெறுகிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி. சு. ஜெய்ஸங்கர் ஒரு விசேட காணொலிச் செய்தி மூலமாக கூடியிருந்தவர்களுக்கு உரையாற்றினார்.

இதையடுத்து இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து தனதுரையில், செயற்திட்டம் இந்தியாவின், பகிர்ந்து கொள்ளும் உணர்வை குறித்துக் காட்டுவதாக குறிப்பிட்டார். ‘இலங்கைக்கு முதலில் பதிலிறுப்பவராக’ இந்தியா என்றும் தொடர்ந்திருக்கும் என்பதையும் கூட அவர் குறிப்பிட்டார்.

அவசரகால நோயாளர் காவுவண்டிச் சேவையின் நாடு முழுவதிற்குமான விஸ்தரிப்பு 2018, ஜூலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

2015 மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தியப் பிரதமரிடம், இலங்கையில் வைத்தியசாலை முன்னனுமதி அவசரகால நோயாளர் காவுவண்டிச் சேவை ஒன்றினை ஆரம்பித்து வைப்பதற்கு, ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதற்கமைய, ஒரு US$ 7.5 மில்லியன் இந்திய நன்கொடை உதவியின் கீழ் ஜூலை 2016 இல் தென் மற்றும் மேல் மாகாணங்களில் 1990 அவசரகால நோயாளர் காவுவண்டிச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.  இந்த நன்கொடை 88 நோயாளர் காவுவண்டிகளைக் கொள்வனவு செய்தல், ஒரு வருடத்திற்கு, சேவைக்கான நடைமுறைச் செலவு மற்றும் அவசரகால பதிலிறுப்பு மையம் ஒன்றை ஸ்தாபிக்கும் செலவு என்பவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.

செயல்திட்டத்தின் நேர்மறைத் தாக்கத்தை கருத்தில் கொண்டு, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசரகால நோயாளர் காவுவண்டிச் சேவையை நாடு முழுவதிலுமாக விஸ்தரிப்பதற்கு இந்தியப் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார். மே 2017 இல், இலங்கைக்கான தனது விஜயத்தின் போது, இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவியின் கீழ் நாடு முழுவதிலுமாக நோயாளர் காவுவண்டிச் சேவையினை விஸ்தரிப்பது தொடர்பிலான ஒரு அறிவித்தலை இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி விடுத்தார்.

209 நோயாளர் காவுவண்டிகளின் கொள்வனவு, ஒரு வருடத்திற்கான சேவையின் நடைமுறைச் செலவுகள் மற்றும் பயிற்சிச் செலவுகள் என்பவற்றை உள்ளடக்கியதாக நாடு முழுவதிலுமான விஸ்தரிப்பை மேற்கொள்வதற்கு இந்தியாவினால் US$  15.02 மில்லியன்கள் ஒரு மேலதிக நன்கொடைத் தொகையாக வழங்கப்பட்டது.

விரைந்த பதிலிறுப்பு நேரம், வினைத்திறனான செயல்முறைகள், மற்றும் உள்ளூர் ஆட்களை சம்பந்தப்படுத்தி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி என்பவற்றை கவனத்தில் கொண்டு இச்சேவை பாராட்டிப் போற்றப்பட்டது.

இலங்கையின் எந்தத் தொலைத் தொடர்பு வலையமைப்பு மூலமாகவும் ‘1990’ எனும் இலக்கத்தை வெறுமனே அழுத்திப் பெறக்கூடிய இந்தக் கட்டணமின்றிய அவசரகால நோயாளர் காவுவண்டிச் சேவை, இலங்கையில் இந்திய வீடமைப்பு செயல்திட்டத்திற்கு அடுத்த பாரிய இந்திய நன்கொடை செயல்திட்டமாக அமைந்துள்ளது.

இலங்கையின் சொந்தத் தெரிவுகள் மற்றும் முன்னுரிமைகள் மற்றும் மக்கள் நலன் சாரந்த செயல்திட்டங்களின் பயனுறுதியான அமுல்படுத்துதலின் அடிப்படையிலும் இலங்கையுடனான இருதரப்பு பங்குடமைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தியா பற்றுறுதி கொண்டதாக தொடர்ந்துமுள்ளது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *