சமூக வலைத்தள ஊடகங்களுக்குள் நின்று போராடும் பத்திரிகைத்துறை

சமூக வலைப்பின்னல் ஊடகங்களுக்குள் சிக்கி அவ்வளர்ச்சி நிலைக்கேற்ப நகராதவன் இயங்குநிலையற்றவனாகவே கணிக்கப்படுகின்றான். உலகத்தைச் சுருட்டி உள்ளங்கைக்குள் வைத்து ஒரு நொடிப்பொழுதில் தகவல்களை அள்ளிக் கொள்ளும் அபார துறையாக மாறியிருப்பது சமூக ஊடகங்களே என மார்பு தட்டிக் கொள்ளும் தொடர்பாடல் யுகத்தில் நாம் வாழுகின்றோம்.சமயக் கருத்துக்களை முன்வைக்க பரவலாக்கப்பட்ட பத்திரிகைத்துறை மக்களின் எதிர்பார்ப்பு மிக்க சாதனமாகவும் சமூகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற மூலமாகவும் புரட்சியாளர்களின் ஊடகமாகவுமே வளர்ந்து வந்தது. அறிவியல் மிக்க சமுதாய பசிக்கு தீனியிட்ட நமது சமூகத்தின் ஆரம்பக் கருவூலம் பத்திரிகை. பத்திரிகைத்துறையினர்தான் மதிப்பு மிக்கவர்கள். -விடயம் தெரிந்தவர்கள் -கெளரவமானவர்கள் என்கின்ற எண்ணக்கருக்கள் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கிறன.

பத்திரிகை நடத்துகின்றவர்களிடம் இருந்த எண்ணக்கருக்களே மக்களை வழிநடத்தியதுடன் அவர்களே சமூகத் தீர்மானிப்பாளர்களாகவும் மாறினர். இவ் எண்ணக்கருக்கள் விதை கொண்ட சுமார் இரண்டு தசாப்த இடைவெளிக்குள் மக்களை ஆட்கொண்ட சாதனமே சமூக வலை ஊடகங்களாகும். இணையம், பேஷ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், யூடியூப் என இவை நீண்டு கொண்டே செல்கின்றன. யூடியூப்பை கூகிளும் வாட்ஸ்அப்பை பேஷ்புக்கும் நிருவகிக்கின்றன. இவ் இரண்டினது நிருவாகத்திறனால் மிகக் குறுகிய காலத்தினுள் மக்களின் தேவைப்பாடுடைய ஜனரஞ்சக சாதனமாக இவை மாறிவிட்டன.

அச்சு வடிவம்,- வானொலி-, தொலைக்காட்சி என சங்கிலித்தொடராகி வளர்ந்து வந்த ஊடகத்துறைக்குள் சமூக ஊடகங்கள் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளன. கையடக்கத் தொலைபேசி வைத்திருக்கின்ற எல்லோரையும் ஏதோவொரு வகையில் பேஸ்புக்கும் டுவிட்டரும் வாட்ஸ்அப்பும் ஆட்கொண்டு விட்டதென்றே சொல்லலாம். இதில் முகநூலே முதலிடம் பிடித்துள்ளது. இதன் பாவனையாளர்களில் 15 வீதமானவர்கள் இலங்கையர்களாக இருப்பதும் முக்கிய தகவலாகும். 2004 ஆம் ஆண்டு புழக்கத்துக்கு வந்த முகநூல் நுாற்றாண்டு கடந்த இதழியலை முந்திவிட்டமை அதன் தேவையினையும் பரவலாக்கலையும் காட்டி நிற்கிறது

முகநூல்-, வாட்ஸ்அப் போன்றவை வேகமாகத் தகவல்களைப் பரிமாற்றுவதற்கும் உறவுகளை இணைப்பதற்கும் அறிவியலை அகலமாக்குவதற்கும் தேடலை அதிகரிப்பதற்கும் விளம்பர விரிவாக்கலுக்குமென பல நன்மைகளைத்தருகின்ற ஒன்றாக நோக்கப்படுகின்ற போதிலும், ஊடகத்திற்கான அத்தியாவசியப் பண்பான நம்பகத்தன்மை அவற்றில் இருக்கிறதா? என்றால் பத்திரிகைத்துறையிலிருந்து பல வீதங்கள் கீழிறங்கிய நிலையே காணப்படுகின்றது.

ஊடகச் சக்கரவர்த்திகளாக இருந்த பத்திரிகை,- வானொலிகளைப் பின்தள்ளி எந்தப் பத்திரிகையாளனும் இல்லாமல் வாடிக்கையாளனையே விளம்பரதாரையும் செய்தியாளரையும் மாற்றி முன்னேற்றி இருக்கின்ற சமூக வலை ஊடகங்களில் நாமே எடிட்டர். நாமே வாசகன் என்ற நிலைக்கு முன்தள்ளி வந்திருக்கிறது. பத்திரிகைகளுக்கு கவிதையையோ கட்டுரையையோ செய்தியியையோ அனுப்பிவிட்டு காத்திருக்கின்ற காலங்கள் புறந்தள்ளப்பட்டு தாம் நினைப்பதை முகநூலிலும் வாட்ஸ்அப்பிலும் இறக்கிவிட்டு இன்பங்காணுகின்ற சூழல் தாராளமயமாகி வருகின்றது.

நண்பர்கள் வட்டங்களினதும் குழுமங்களினதும் புழங்கும் நிலைக்கேற்ப தகுதியற்ற ஆக்கங்கள் கூடத் தலை நிமிர்ந்து விடுகின்ற நிலை பெருகிவருகின்றன. எழுத்துப் பிழைகள் இன்றி எழுதத்தெரிந்தவர்ளும் விடயதானமுள்ளவர்களுமே பல காலம் காத்திருந்து பத்திரிகையில் அங்கீகாரம் பெற்ற இடத்தை ஒரு கவிதைக்குள்ளேயே பல எழுத்துப்பிழைகளையும் இலக்கியப்பிழைகளையும் கொண்டவர்கள் கவிஞர்களாகவும் மாறி இருக்கின்ற நிலை இவ் ஊடகங்கள் மீதான நம்பிக்கையீனத்தை அதிகரிக்க வைத்துள்ளது. ஆனால் பத்திரிகைகளில் ஆக்கங்கள் தகுதிவாய்ந்த ஒருவரினாலோ பலரினாலோ அவதானங்களுக்கு உட்பட்டு அரங்கேறுகின்றன. இதனால் பத்திரிகை தரமுள்ள எழுத்துக்களாகவும் காலம்கடந்தும் பேசு நிலையிலுள்ள எழுத்துக்களாகவும் தன்னை நிலைநிறுத்தி வருகின்றது.

முகநூலில் வரும் பதிவுகளில் பெரும்பாலானவற்றுக்கு சிறப்பு! இனிமை! மகிழ்ச்சி என்றெல்லாம் பின்னுாட்டல் வரும் போது பதிவிடுகின்றவர்கள் உசாராகி விடுகின்றனர். இந்த நிலைகளெல்லாம் பத்திரிகைகளில் இல்லாமையால் அதன்தரம் பேணப்பட்டுக் கொண்டே வருகின்றன.

பத்திரிகைகள் செய்திகளை முகவர்களினூடாக பெறுவதனால்் உண்மைத் தன்மை ஒருநிலைப்படுத்தப்பட்டு வருவதுடன்் பிரதம-செய்தி- உதவி ஆசிரியர்களின் கைகளுக்குள் சிக்கி சீராக்கம் பெறுகின்ற பொறிமுறைகள் எதுவும் முகநூல் போன்றவைகளில் கிடையாது. தனக்குக் கிடைக்கின்ற தகவல்கள் உண்மையா? பொய்யா? எனப் பரிசோதிப்பதற்கெல்லாம் காலங்கள் கிடையாது. வேகமாகப் பதிவிட்டு அதற்கான பின்னூட்டலைப் பெறுவதிலேயே குறியாக இருக்கின்றனர். முகநுால்-, வட்ஸ்அப் பாவனையாளர்களின் வேகமான பதிவேற்றங்களினால் செய்தியாளர்களின் செய்திகள் காலங்கடந்ததாகிப் பின்தள்ளப்படுகின்ற ஆபத்தான சூழலும் அதிகரித்து வருகின்றது

சமூக வலை ஊடகங்களுக்கு ஈடுகொடுப்பதற்காக பத்திரிகைகள் இணையப் பக்கங்களிலும் தனியான டிஜிட்டல் மாற்றங்களுக்குள்ளும் தம்மை உள்ளாக்கிவருகின்றன. எனினும் அதன் செய்தி வழங்குகின்ற வேகம் சமூக வலை ஊடகங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்னிக்கின்ற நிலையும் ஏற்பட்டு வருகின்றது

துறை சார்பில்லாத பலர் பத்திரிகைத்துறைக்குள் வந்துவிட்டதன் விளைவாக அவர்கள் செய்தி அனுப்பு நர்களாகவும் படவிளக்கக் காரர்களாகவும் செயற்பட்டு வருகின்றனர். இந்நிலை அவசரமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். இதற்கு செய்தி ஊடகங்களும் தங்களுக்கான எழுத்தரசியலிலிருந்து கீழிறங்கி வர வேண்டிய தேவையுண்டு.

தவறான செய்திகள்-, தனியாள் கெளரவத்தைப் பாதிக்கின்ற செய்திகள்- தனிப்பட்ட அரசியல் திணிப்புள்ள செய்திகள்-, போலி முகங்களில் வந்து தாக்குகின்ற பதிவுகள் முதலியன சமூக ஊடகங்களால் அவ்வப்போது பரப்பப்படுகின்றன. பத்திரிகைச் செய்திகள் தாமதமாகின்ற போதிலும் விரிவான- முழுமையான செய்திகளை- தகவல்களை கட்டுரைகளைத் தருவதால் பத்திரிகைச் செய்திகளின் தரம் ஒரு சீர்த்தன்மையுடன் பேணப்பட்டுக்கொண்டே வருகின்றன.

குறித்த வயதுப்பிரிவினரால் மட்டும் நுகரப்படுகின்ற ஊடகமாகப் பத்திரிகைகள் உள்ளதால். எதிர்காலத்தில் அதன் நிலை கேள்விக்குறியாகலாம் என்பதும் பத்திரிகைத் துறை மீதுள்ள சவாலாகும்.

வாசிப்புப் பழக்கம் அதிகரிக்கும் போதே தனியாள் ஆளுமை விருத்தி பெறுவதுடன் அறிவுத் தரம்மிக்க சமூக அமைப்பும் உருவாகும். இதனை சமூக ஊடகங்களால் நிவர்த்திக்க முடியுமா? என்பது கேள்விக்குரியதே. புதினங்களுக்கப்பால் கல்வி,- விஞ்ஞானம்-, சினிமா-, விளையாட்டு எனப்பல இணைப்புக்களைக் கொண்ட பத்திரிகைத்துறையின் தேவை உணரப்பட்டுள்ள போதிலும் சமூக வலைப்பின்னல் ஊடகங்களுக்குள் நின்று பத்திரிகை தன்னை நிலைநிறுத்தப் போராட வேண்டும் என்பதில் ஐயமில்லை.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *